Tuesday 7 October 2014

பேங் பேங் (2014) - திரைவிமர்சனம்

21:48

Share it Please
இந்திய ராணுவத்தால் தேடப்பட்டு வரும் பயங்கரவாதியான உமரை லண்டன் போலீசார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். உமரை (டேனி) இந்தியாவிற்கு அழைத்து வர இந்திய ராணுவம் சார்பாக ஒரு அதிகாரி லண்டனுக்கு சென்று உமரை சந்தித்து பேசுகிறார். அப்போது உமரின் ஆட்கள் துப்பாக்கியுடன் வந்து அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தி உமரை அழைத்து செல்கிறார்கள். இந்திய ராணுவ அதிகாரியை உமர் கொன்று விட்டு செல்கிறார்.

வெளியே வந்த உமர் லண்டனில் உள்ள விலையுயர்ந்த வைரக்கல்லான கோஹினூர் வைரத்தை கைப்பற்ற முயற்சி செய்கிறார். அதற்குள் அந்த வைரத்தை நாயகனான ஹிருத்திக் ரோஷன் திருடி விட்டதாகவும் அவன் இந்தியாவிற்கு சென்று விட்டதாகவும் உமரின் ஆட்களுக்கு தகவல் கிடைக்கிறது. இதனால் அந்த வைரத்தை கைப்பற்ற உமரின் ஆட்கள் இந்தியாவில் உள்ள ஹிருத்திக்கிடம் பேரம் பேசுகிறார்கள்.

இறுதியில் 5 மில்லியன் டாலர் பணத்திற்கு வைரத்தை வாங்க உமரின் ஆட்கள் முடிவு செய்கிறார்கள். பேசியபடி அந்த பணத்தை ஹிருத்திக்கின் வங்கி கணக்கில் செலுத்துகிறார்கள். பணம் வந்த பிறகு ஹிருத்திக் பணம் போதாது இன்னும் வேண்டும் என்று கேட்கிறார். இதனால் இவர்களுக்குள் மோதல் ஏற்படுகிறது.

இந்த மோதலில் இருந்து தப்பித்து செல்லும் ஹிருத்திக், செல்லும் வழியில் உள்ள ஒரு ஹோட்டலில் நாயகியான கத்ரினா கைப்பை பார்க்கிறார். பார்த்தவுடன் இவர் மீது காதல் கொள்கிறார். முதல் சந்திப்பிலேயே இருவரும் பேசிக்கொள்கிறார்கள். இவர்கள் பேசும்போது பார்க்கும் உமர் ஆட்களும், போலீசாரும் கத்ரினா கைப்பை ஹிருத்திக்கின் கூட்டாளி என்று நினைத்து துரத்த ஆரம்பிக்கிறார்கள். கத்ரினாவை காப்பாற்ற நினைத்து ஹிருத்திக் அவருடனே அழைத்து செல்கிறார்.

இறுதியில் ஹிருத்திக், கத்ரினா இருவரும் போலீசிடம் மாட்டினார்களா? அல்லது உமரின் கூட்டாளிகளிடம் சிக்கினார்களா? வைரம் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

படத்தில் ஹிருத்திக் ரோஷன் வழக்கம் போல் மிக சர்வ சாதாரணமாக தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். முந்தைய படத்தை விட தனது இமேஜை அதிகப்படுத்தும் விதமாக ராஜ்வீர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி உள்ளார். கத்ரினாவின் அப்பாவித் தனமான அழகான தோற்றம், ரசிகர்களை கவரும் வண்ணம் அமைந்துள்ளது.

தற்போது உள்ள ரசிகர்களை கவரும் வகையில் கார் சேஸிங், துப்பாக்கிச் சண்டை, அதிரடி ஆக்சன் சண்டைக் காட்சிகள் என பலவித அம்சங்களை புகுத்தி ரசிகர்கள் ரசிக்கும் படி படத்தை இயக்கி உள்ளார் இயக்குனர் சித்தார்த் ஆனந்த். கார் பந்தய காட்சிகள் மிக அற்புதமாக படமாக்கிய ஒளிப்பதிவாளர் விகாஸ் சிவராமனை பாராட்டலாம். விஷால் சேகர் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் ‘பேங் பேங்’ குட் பேக்கேஜ்.

0 comments:

Post a Comment